சைபர் கிரைமில் இளம் தொழிலதிபர் புகார்!
நடிகர் ரவி மோகன் மற்றும் Finance with Harish தொடர்பான விவகாரங்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வரும் நிலையில்,தன்னையும் குறிவைத்து சைபர் புல்லியிங் நடைபெறுவதாக இளம் தொழிலதிபர் புகார் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக கோவை மாநகர சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இளம் தொழிலதிபரான பார்த்திபன் கே. தனது தொழில் நிறுவனம் மற்றும் தனிப்பட்ட நற்பெயரைப் பாதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோக்கள்,படங்கள் உள்ளிட்ட உள்ளடக்கங்கள் வெளியிடப்படுவதாகப் புகாரில் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாகத் தன்னை குறிவைத்து உள்ளடக்கங்கள் பரப்பப்படுவதாகவும்,இதனால் தனது தொழில் மற்றும் வணிகச் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பு கோவை ஆடிஸ் வீதியில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது.மேலும்,சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் பதிவுகள் தனது நற்பெயருக்கும்,தன்னை நம்பியுள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடனான உறவுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அவர் கவலை தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே வீடியோக்களை வெளியிடுவதை நிறுத்துவதாக மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக, இணையக் குற்றப் புகார் பதிவு செய்யப்பட்டதற்கான ஒப்புகை ஆவணம் இருப்பதாகக் கூறப்படுகிறது.சமூக வலைதளப் பதிவுகள் தொடர்பான ஆதாரங்களும் புகாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி,சம்பந்தப்பட்ட சமூக வலைதளப் பதிவுகள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை ஆய்வு செய்ய வேண்டும் எனப் புகார்தாரர் கோரியுள்ளார். விசாரணையில் சட்டவிரோதச் செயல்கள் உறுதிப்படுத்தப்பட்டால்,சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0