மேல்முடி கோயிலுக்குச் செல்லத் தடை ஏன்? மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்! அனுமதி வழங்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம்: காடேஸ்வரா சுப்பிரமணியம் எச்சரிக்கை!

Oct 8, 2026 - 22:36
Oct 8, 2026 - 22:38
 0  131
மேல்முடி கோயிலுக்குச் செல்லத் தடை ஏன்? மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்! அனுமதி வழங்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம்: காடேஸ்வரா சுப்பிரமணியம் எச்சரிக்கை!
மேல்முடி கோயிலுக்குச் செல்லத் தடை ஏன்? மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்! அனுமதி வழங்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம்: காடேஸ்வரா சுப்பிரமணியம் எச்சரிக்கை!

கோவை தடாகம் பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மேல்முடி அரங்கநாதர் கோயில் மற்றும் ஆனைக்கட்டி மலைப்பகுதியில் உள்ள பெருமாள்முடி ரங்கநாதர் கோயிலுக்குச் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்க வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தடாகம் பேருந்து நிறுத்தம் பகுதியில், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தடாகம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 50 கிராமங்களின் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தி.மு.க.வினரும் கட்சிக் கொடியுடன் பங்கேற்று, கோயில் கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி ஆதரவு தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் எதிராகக் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

சுமார் 400 ஆண்டுகள் பழமையான மேல்முடி அரங்கநாதர் கோயிலும், பெருமாள்முடி ரங்கநாதர் கோயிலும் புரட்டாசி சனிக்கிழமைகளில் மட்டுமே திறக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்தக் கோயில்களுக்கு சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் வெளியூர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டிற்காகச் செல்வது வழக்கம்.

இந்த ஆண்டு புரட்டாசியின் முதல் இரண்டு சனிக்கிழமைகளில் பக்தர்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்பட்ட நிலையில், சுமார் 5,000 பேர் வரை மலைக்கோயில்களுக்குச் சென்று வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மூன்றாவது சனிக்கிழமையில் தடாகம் வழியாக மேல்முடி செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டதுடன், பாலமலை வழியாகச் செல்ல 500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் பக்தர்களின் வழிபாட்டு உரிமை பாதிக்கப்படுவதாகக் கூறிய போராட்டக்காரர்கள், விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், வரும் சனிக்கிழமை தடாகம் வழியாக மேல்முடி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால், அன்று மாலை தடாகம் பகுதியில் தனது தலைமையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார்.

What's Your Reaction?

Like Like 3
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0