கோவையில் உத்வாசன சேவா..40 டன் புனிதப் பொருட்கள் சேகரிப்பு...!
கோவை வீடுகளில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள தெய்வப் படங்கள், விக்ரகங்கள் உள்ளிட்ட புனிதப் பொருட்களை முறையாக சேகரித்து, மறுசுழற்சி செய்வதற்கான ‘உத்வாசன சேவா’ சிறப்பு முகாம் கோவையில் நடந்தது.
ஸ்ரீ காமாக்ஷி ஆர்ஷ சம்ஸ்கிருதி டிரஸ்ட் சார்பில், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தி சேவாஸ்ரம் டிரஸ்ட் வளாகத்தில் இம்முகாம் நடைபெற்றது. காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நடந்த முகாமில், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த தெய்வப் படங்கள், சிலைகள், உலோக பூஜைப் பொருட்கள், ஆன்மிகம் மற்றும் ஸ்லோக புத்தகங்கள், காலண்டர்கள், பஞ்சாங்கங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினர்.
பிரேம் செய்யப்பட்ட மற்றும் லேமினேட் செய்யப்பட்ட தெய்வப் படங்கள், சிலைகளை கொண்டு வரும்போது துணி அல்லது சணல் பைகள், அட்டை பெட்டிகளை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.இதுகுறித்து, ஸ்ரீ காமாக்ஷி ஆர்ஷ சம்ஸ்கிருதி டிரஸ்ட் நிறுவனர் வசுதா சுந்தர் கூறியதாவது:
ஸ்ரீ காமாக்ஷி ஆர்ஷ சம்ஸ்கிருதி டிரஸ்ட், 2023 ஜூலையில் தொடங்கப்பட்டது. காஞ்சி பெரியவரின் வழிகாட்டுதலுடன் தர்மப் பிரசார நடவடிக்கைகள், பயிலரங்குகள், வினாடி வினா போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
கோவில்கள் மற்றும் பொது இடங்களில் முறையாக பராமரிக்கப்படாமல் மரத்தடிகளில் வைக்கப்படும் தெய்வப் படங்கள், விக்ரகங்களுக்கு உரிய மரியாதையுடன் வழியனுப்பு வழங்கும் நோக்கில், ‘உத்வாசன சேவா’ திட்டம் 2024 ஜனவரியில் தொடங்கப்பட்டது.
பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்படும் பொருட்கள் படம், மரம், காகிதம், பிளாஸ்டிக், கண்ணாடி உள்ளிட்டவையாகப் பிரிக்கப்பட்டு, மறுவிற்பனை மற்றும் மறுசுழற்சிக்காக உரிய நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன. இதன் மூலம் புனிதப் பொருட்கள் வீணாவதும், முறையற்ற வகையில் அகற்றப்படுவதும் தடுக்கப்படுகிறது.
பெங்களூரு, சென்னையில் இதுபோன்ற சேகரிப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. கோவையில் முதன்முறையாக நடந்த இம்முகாமில் சுமார் 40 டன் புனிதப் பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இச்சேவையை பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக வசுதா சுந்தர் தெரிவித்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0