மக்கள் கேட்டாங்க.. பஸ் வந்தாச்சு! நீலாம்பூரில் மீண்டும் 39-ம் எண் பஸ் சேவை!

Sep 16, 2026 - 15:39
 0  9
மக்கள் கேட்டாங்க.. பஸ் வந்தாச்சு! நீலாம்பூரில் மீண்டும் 39-ம் எண் பஸ் சேவை!
மக்கள் கேட்டாங்க.. பஸ் வந்தாச்சு! நீலாம்பூரில் மீண்டும் 39-ம் எண் பஸ் சேவை!

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நீலாம்பூர் பகுதியில், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, செரையம்பாளையம்–அம்பேத்கர் நகர் பகுதிகளை இணைக்கும் அரசு பஸ் எண் 39 சேவையை, கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ., கனிமொழி சந்தோஷ்  தொடங்கி வைத்தார்.கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்த பஸ் சேவை மீண்டும் தொடங்கப்பட்டதால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.பஸ் சேவையை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ., கனிமொழி சந்தோஷ், சிறிது தூரம் பஸ்சில் பயணம் செய்து, பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடம் அவர்களின் தேவைகள் மற்றும் குறைகள் குறித்து கேட்டறிந்தார்.

நிகழ்ச்சியில் எஸ்.எஸ்.குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கணேசமூர்த்தி, வெள்ளானைப்பட்டி ஊராட்சி செயலாளர் கண்ணன் (எ) தேவராஜ், செரையாம்பாளையம் கிளை செயலாளர் குணசேகரன், கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.மக்கள் குறைகளை பார்த்து செயல்படுகிறோம்’

பின்னர் செய்தியாளர்களிடம் எம்.எல்.ஏ., கனிமொழி சந்தோஷ் கூறியதாவது:

கொரோனாவுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த பஸ் சேவை தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பஸ் சேவை ஏன் நிறுத்தப்பட்டது என்பது குறித்து முந்தைய ஆட்சியாளர்களிடம் தான் கேட்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரை மக்கள் குறைகளை பார்த்து, அவற்றை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டு வருகிறோம்.மக்கள் தொகையை மட்டும் கணக்கில் கொண்டு அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதில்லை. எந்த அளவிலான மக்கள் தொகையாக இருந்தாலும், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

‘விஜய் சேதுபதிக்கு நேரம் சரியில்லை’

நடிகர் விஜய் சேதுபதி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் குறித்து விமர்சித்ததாக வெளியாகி வரும் கருத்துகள் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த எம்.எல்.ஏ., கனிமொழி சந்தோஷ், இது ஒரு கேளிக்கை நிகழ்ச்சி. நடிகர் விஜய் சேதுபதி மகாராஜா திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு அவரது நிலை குறித்து தான் கூறியிருந்ததாக தெரிவித்தார்.அப்போது அவருக்கு ‘ஜாக்பாட்’ அடிக்கப் போகிறது என்று கூறியதாகவும், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு ஒரு ஜாக்பாட் ஆக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சுமார் ரூ.80 கோடி வரை சம்பளம் பெறுவதாகவும், சம்பளத்திற்காக அவர் பேசியிருக்கலாம் என்றும் கனிமொழி சந்தோஷ் தெரிவித்தார்.முதல்வரை குறிப்பிட்டு பேசவில்லை என சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும், வெளிப்படையாக கூற வேண்டும் என்றால், அது ‘வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல’ இருப்பதாக விமர்சித்தார்.

அரசியல் விமர்சனங்களை யார் வேண்டுமானாலும் முன்வைக்கலாம். ஆனால் பார்த்து பேச வேண்டும். அவர் பேசுவதால் எதுவும் மாறப்போவதில்லை. எங்களது அரசாங்கம் வெளிப்படையாக செயல்பட்டு வருகிறது.

மேலும், விஜய் சேதுபதி குறிப்பிட்ட கட்சியினரிடம் இருந்து பணம் வாங்கிக்கொண்டு பேசுவதாகவும், தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எங்கள் தலைவரின் பெயரை குறிப்பிட்டு அவர் பேசட்டும். அதற்கு நாங்கள் பதில் கூறுவோம்; மக்கள் பதில் கூறுவார்கள். இதை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. அவர் தனது பிழைப்புக்காக செய்கிறார். விஜய் சேதுபதிக்கு நேரம் சரியில்லை; இதோடு விட்டால் நன்றாக இருக்கும் என்று கனிமொழி சந்தோஷ் தெரிவித்தார்.

‘சட்டசபையை குழந்தைகள் கூட பார்க்கின்றனர்’

சட்டசபை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், சட்டசபை நிகழ்வுகளை குழந்தைகள் முதல் அனைவரும் பார்த்து வருவதாக தெரிவித்தார்.

இடைத்தேர்தல் குறித்து

இடைத்தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, தேர்தலுக்கு முன்பாக கேட்டிருந்தால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை கூறியிருப்பார்கள்.

தற்போது தங்களது ஆட்சியின் செயல்பாடுகளை மக்கள் நேரடியாக பார்த்துவிட்டதாகவும், அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இடைத்தேர்தலில் தங்களது தலைவர் யாரை வேட்பாளராக நிறுத்துகிறாரோ, அவர்தான் வெற்றியாளர் என்றும் எம்.எல்.ஏ., கனிமொழி சந்தோஷ் தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0