சந்தேகம் வந்தா உடனே கேளுங்க!” 9-ம் வகுப்பு மாணவன் உருவாக்கிய ஏஐ செயலி!
கோவை மருதமலை சாலையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், 9-ம் வகுப்பு மாணவன் ஹரிஹரனின் யோசனையில் உருவான ‘ஹிட் லேர்ன்’ ஏஐ கற்றல் செயலியின் துவக்க விழா நடைபெற்றது. மாணவனின் சொந்த கற்றல் சிரமத்திலிருந்து பிறந்த இந்தச் செயலி, மாணவர்கள் தாங்களாகவே பாடங்களைக் கற்றுக்கொள்ளவும், சந்தேகங்களுக்கு உடனடியாக விளக்கம் பெறவும் உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவன் ஹரிஹரன் கூறியதாவது:
8-ம் வகுப்பு விடுமுறையின்போது தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மீது ஆர்வம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, கோவையில் உள்ள ஹோம் ஐடியாஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வழிகாட்டுதலுடன் கோடிங் உள்ளிட்ட தொழில்நுட்பங்களைக் கற்கத் தொடங்கினேன்.
அப்போது, எனது சொந்த கற்றல் அனுபவத்தில் ஒரு சிக்கலை அடையாளம் கண்டேன். ஒருபுறம் டியூஷன் வகுப்புகளுக்குச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. மறுபுறம், படிக்கும்போது சந்தேகம் ஏற்பட்டால், அந்த நேரத்தில் உடனடியாக விளக்கம் பெற முடியாத நிலையும் இருந்தது
.சந்தேகம் வரும் நேரத்தில் உடனடியாகக் கேட்டு விளக்கம் பெறக்கூடிய ஒரு ஏஐ இருந்தால் எப்படி இருக்கும்?” என்ற சிந்தனை ஏற்பட்டது. அதிலிருந்து, மாணவர்கள் தாங்களாகவே பாடங்களைக் கற்றுக்கொண்டு, புரியாதவற்றை குரல் மூலம் கேட்டு உடனடியாக விளக்கம் பெறக்கூடிய ஒரு கற்றல் செயலியை உருவாக்க வேண்டும் என்ற யோசனை உருவானது.
இந்த யோசனையின் அடிப்படையில், தான் கோடிங் கற்ற நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழுவினருடன் இணைந்து செயலியின் தொழில்நுட்ப அம்சங்களை உருவாக்கியதாகவும், தனது தேவையை விளக்குவது, செயலி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த கருத்துகளைப் பகிர்வது, அதன் உருவாக்கப் பயணத்தைப் புரிந்துகொள்வது என, ஒரு யோசனை தொழில்நுட்பத் தயாரிப்பாக மாறும் செயல்முறையிலும் பங்கேற்றதாகவும் தெரிவித்தார்
.தனது ஆரம்ப நிலை சிந்தனையே தற்போது ‘ஹிட் லேர்ன்’ செயலியாக உருவாகியுள்ளது. இதில், மாணவர்கள் தங்களது வகுப்பைத் தேர்வு செய்து கற்றல் வீடியோக்களைப் பார்க்கலாம். பாடம் தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டால், அதை குரல் மூலம் கேட்டு ஏஐ உதவியுடன் விளக்கம் பெறலாம்.
மேலும், மாணவர்கள் கற்றுக்கொண்டதைச் சோதிக்கும் வகையில் வினாடி வினாக்கள் மற்றும் புதிர்கள் நடத்தப்படுகின்றன. வாய்ஸ் டு வாய்ஸ் கேள்வி–பதில் வசதி, பல்மொழி ஆதரவு, ஏஐ அடிப்படையிலான கற்றல், ஊடாடும் மதிப்பீடுகள், மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் வசதி உள்ளிட்ட அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன
.இந்தச் செயலி மாணவர்களின் கற்றல் திறனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த கருவியாக அமையும் என்று எதிர்பார்ப்பதாக மாணவன் ஹரிஹரன் தெரிவித்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0