பாஜகவுக்கு எதிராக மக்களை திரட்டுவோம்
எஸ்டிபிஐ தேசிய தலைவர் ஃபைஜி
கோவை, ஆக.20: கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் எஸ்டிபிஐ கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் ஃபைஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாநில தலைவர் நெல்லை முபாரக் மற்றும் அனைத்து மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கோவையில் மூலப்பொருள் வங்கி மற்றும் விலை கட்டுப்பாட்டு வாரியம் அமைக்க வேண்டும். சிறு தொழில்களை பாதுகாக்க வட்டி மானியம், ஜிஎஸ்டி சீரமைப்பு மற்றும் மின் கட்டண சலுகை வழங்க வேண்டும். கோவை–திருப்பூர் தொழில் மண்டலங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், ஈரோடு மாவட்டத்தில் தேசிய மஞ்சள் வாரிய கிளை அமைக்க வேண்டும், பெருந்துறையில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும், போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மதம் மாறிய இஸ்லாமியர்களின் சமூக நீதி உரிமையை பாதுகாக்க தமிழக அரசு சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும், எஃப்சிஆர்ஏ சட்டத் திருத்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்டிபிஐ தேசிய தலைவர் ஃபைஜி, “பாஜகவுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கவும், எஸ்டிபிஐ கட்சியை வலுப்படுத்தவும் இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன” என்றார்.
மேலும், “அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பாஜக செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிராக மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தியே பாஜகவினர் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இதனை மக்களிடம் எடுத்துச் சொல்வோம்” என தெரிவித்தார்.
“இதுபோன்ற பிரச்சினைகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய பாரம்பரிய கட்சிகளான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதை செய்யவில்லை. மக்களின் போராட்டங்களுக்கும் அவர்கள் உரிய ஆதரவு அளிக்கவில்லை” என்றும் ஃபைஜி குற்றம்சாட்டினார்.
கூட்டத்தில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0