தொண்டாமுத்தூரில் சக்கர ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்...!
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே வரதராஜபுரம் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சக்கர ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
விழாவையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் மற்றும் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடந்தன. கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சக்கர ராஜராஜேஸ்வரி அம்மன், ஸ்ரீ பால விநாயகர், ஸ்ரீ தீர்த்த விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீ கருப்பராயன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக புனித நீர் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க கோவில் விமானம் மற்றும் மூலவர் சன்னதிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.விழாவில் கௌமார மடாலயம் - சிரலை ஆதினம் மடாதிபதி தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், குருமகா சன்னிதானம் டாக்டர் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், அருள்மிகு ஸ்ரீ நாகசக்தி அம்மன் தியான பீடம் விஸ்வகர்மா ஐகத்திரு பிரம்மஸ்ரீ ஸ்ரீ சிவசண்முகசுந்தர பாபுஜி சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்து விழாவை சிறப்பித்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் கட்சி நிர்வாகிகள், முன்னாள் மற்றும் தற்போதைய மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் மற்றும் ஆன்மிகப் பிரமுகர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் ஆன்மிக அன்பர்கள் குடும்பத்துடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவைத் தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டதுடன், கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் செல்வராஜ், செயலாளர் சண்முகம், துணைச் செயலாளர் ராம்குமார், பொருளாளர் ரிக். ரவி, துணைத் தலைவர் செல்வம், துணைத் தலைவர் ஐங்கர திருமூர்த்தி மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0