பெரியநாயக்கன்பாளையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்..!

Oct 7, 2026 - 06:51
 0  26
பெரியநாயக்கன்பாளையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்..!

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். 

கோவை மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்துத் துறைகளில் உதவிகளும் ஓரிடத்தில் எளிதில் கிடைக்கும் வகையில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பவனரின் சிறப்பு உத்தரவின்பேரில் மாற்றத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் பெரியநாயக்கன்பாளையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சிறப்பு முகாம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் உள்ள வெங்கடகிருஷ்ணன் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 

கூடலூர் நகராட்சியுடன் இணைந்து நடத்தப்பட்ட இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு கூடலூர் நகர்மன்றத் தலைவர் அ.அறிவரசு தலைமை வகித்து தொடக்கி வைத்துப் பார்வையிட்டார். அவர் பேசும்போது கூடலூர் கவுண்டம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த ஆரம்ப சுகாதார நிலையம் விரைவில் 10 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளின் மருத்துவ பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என தெரிவித்தார். நகராட்சி சுகாதார ஆய்வாளர் முருகேஷ் அனைவரையும் வரவேற்றார். முகாமின் நோக்கம் குறித்து கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராம்குமார் விளக்கி கூறினார்.

முகாமில் பொதுத்துறை வங்கி, வருவாய்துறை, வேலைவாய்ப்பு, கால்நடை, சமூகநலம், வீட்டுவசதி வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டு துறைசார்ந்த பயன்களை விளக்கினர். கோவை மாவட்ட பொதுச்சுகாதார துறையினர் மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து தகுதிவாய்ந்தவர்களுக்கு அடையாள அட்டை, யுடிஐடி, உதவி உபகரணங்கள், இலவச பஸ் பாஸ், மூன்றுசக்கர மோட்டார் சைக்கிள், மூன்று சக்கர வண்டி உள்ளிட்டவற்றை வழங்க பரிந்துரை செய்தனர்.

தமிழ்நாடு ரைட்ஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் மாதையன் நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை நகராட்சிப் பொறியாளர் சோமசுந்தரம், நகர்மன்ற உறுப்பினர்கள் துரை செந்தில், பாலசுப்பிரமணியம், ரேவதி, சித்ரா, பிரியா, தமிழ்நாடு ரைட்ஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்தி, கரிகாலன், வட்டார சிவக்குமார், வினோத்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0