கோவை ஒப்பந்ததாரர்களின் குமுறல்! அரசு கோரிக்கைகளை நிறைவேற்றுமா?
கோவை ஊராட்சி ஒன்றிய ஒப்பந்ததாரர்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா?கட்டுமானப் பொருட்களை அரசு வழங்க வேண்டும்; நிலுவைத் தொகைகளை விரைந்து விடுவிக்க வேண்டும் – சங்க நிர்வாகி நாராயணசாமி வலியுறுத்தல்!
கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் ஒன்றிணைந்து, தங்களது வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
கோவை மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றிய ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தின் நிறைவில், சங்க நிர்வாகி நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் ஒன்றிணைந்து இந்தக் கூட்டத்தை நடத்தியுள்ளோம். கடந்த 2008-ம் ஆண்டிலும் இதேபோன்று சங்கம் அமைத்துச் செயல்பட்டு வந்தோம். கிராமப்புறங்களில் குறைந்த மதிப்பிலான ஒப்பந்தப் பணிகளை ஏற்று, தரம் குறையாமல் அர்ப்பணிப்புடன் செய்து வருகிறோம்.
ஆனால், கட்டுமானப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அதற்கேற்ப பொதுப்பணித்துறையின் ஒப்பந்தப் பணிகளுக்கான மதிப்பீட்டு விகிதங்கள் (Schedule of Rates) முறையாக மாற்றப்படுவதில்லை. இதனால், சந்தை விலையைவிட சுமார் 20 சதவீதம் குறைவான மதிப்பீட்டில் பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.மேலும், ரூ.10 லட்சத்திற்குக் குறைவான மதிப்பிலான பணிகளுக்கும் ஆன்லைன் டெண்டர் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால், உள்ளூர் ஒப்பந்ததாரர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசு வழங்கி வந்த சிமெண்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை மீண்டும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிகள் முடிக்கப்பட்ட பிறகு, தணிக்கை தொடர்பான தொகைகளை விடுவிப்பதில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்க வேண்டும். மேலும், பிடித்தம் செய்யப்பட்ட வைப்புத் தொகையான EMD-ஐயும் விரைந்து வழங்க வேண்டும்.இந்தக் கூட்டமும், எங்களது கோரிக்கைகளும் எந்த அரசுக்கும் அதிகாரிகளுக்கும் எதிரானவை அல்ல. ஊராட்சி ஒன்றிய ஒப்பந்ததாரர்கள் சந்தித்து வரும் நியாயமான வாழ்வாதாரப் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று, உரிய தீர்வு காண்பதே எங்களது நோக்கம்.எனவே, ஒப்பந்ததாரர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சங்கத்தின் முக்கிய எதிர்பார்ப்பாகும்.இவ்வாறு சங்க நிர்வாகி நாராயணசாமி தெரிவித்தார்.
What's Your Reaction?
Like
2
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0