சசூரி கல்விக் குழுமத்தின் வெள்ளி விழா கொண்டாட்டம்! வெள்ளி விழா நினைவுச் சின்னம், 8 புதிய நவீன மையங்கள் திறப்பு – கொங்கு மண்டல சாதனையாளர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் விருது வழங்கிப் பாராட்டு!
திருப்பூர் மாவட்டம், விஜயமங்கலத்தில் செயல்பட்டு வரும் சசூரி கல்விக் குழுமத்தின் 25-ம் ஆண்டு வெள்ளி விழா, முப்பெரும் விழாவாகக் கோலாகலமாக நடைபெற்றது.சசூரி கல்விக் குழுமத்தின் தலைவர் ஏ.எம். கந்தசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில், குழுமத்தின் செயலாளர் சவிதா மோகன்ராஜ், செயல் இயக்குநர் டாக்டர் பி. நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வெள்ளி விழா நினைவுச் சின்னத்தைத் திறந்து வைத்தார். மேலும், மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் தொழில்துறை திறன் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள எட்டு புதிய நவீன கல்வி மற்றும் தொழில் மேம்பாட்டு மையங்களையும் தொடங்கி வைத்தார்.முன்னதாக, கொங்கு மண்டலத்தில் மருத்துவம், விவசாயம், கல்வி, தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.அப்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை அடையாளம் கண்டு விருதுகள் வழங்குவது, அவர்களை மேலும் ஊக்கப்படுத்துவதுடன், இளம் தலைமுறையினருக்கும் சிறந்த முன்னுதாரணமாக அமையும் எனத் தெரிவித்தார்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சசூரி கல்விக் குழுமத்தின் செயலாளர் சவிதா மோகன்ராஜ், மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதோடு, அவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழில்துறை சார்ந்த திறன்களை வளர்க்கவும் எட்டு புதிய நவீன கல்வி மற்றும் தொழில் மேம்பாட்டு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.விழாவில் திருப்பூர் வடக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சத்தியபாமா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் உள்ளிட்ட தொழில்துறையினர், கல்வியாளர்கள், சாதனை படைத்த முன்னாள் மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனத்தின் நலன் விரும்பிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
கல்விச் சேவையில் 25 ஆண்டுகளைக் கடந்து சாதனைப் பயணத்தைத் தொடர்ந்து வரும் சசூரி கல்விக் குழுமத்தின் வளர்ச்சியையும், சாதனைகளையும் கொண்டாடும் வகையில் இந்த வெள்ளி விழா அமைந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0