முதியவர் நலனுக்காக 'அபயம்' 24/7 உதவி சேவை தொடக்கம்..!
கோவையைச் சேர்ந்த புவன தர்மம் அறக்கட்டளை சார்பில், முதியோரின் மருத்துவத் தேவைகள் மற்றும் அவசரகால உதவிகளை ஒருங்கிணைக்கும் வகையில், ‘அபயம்’ 24 மணி நேர முதியோர் நல உதவி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
மூத்த இதயநோய் சிகிச்சை நிபுணரும், பி.எஸ்.ஜி. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குநருமான டாக்டர் ஜே.எஸ். புவனேஸ்வரன் தலைமையில் புவன தர்மம் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்ட இவ்வறக்கட்டளை, கலாசாரம், கல்வி, மருத்துவம், சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சேவையாற்றி வருகிறது.
‘அபயம்’ சேவையின் மூலம் முதியோர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 24 மணி நேரமும், வாரத்தின் 7 நாட்களும் மருத்துவ உதவிகளைப் பெறலாம். புறநோயாளர் சிகிச்சை, உள்நோயாளர் சிகிச்சை மற்றும் அவசர மருத்துவ உதவிகளை ஒருங்கிணைக்க 95146 92026 என்ற பிரத்யேக தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவ வழிகாட்டுதல் மற்றும் மருத்துவமனை தன்னார்வலர் ஒருங்கிணைப்பு சேவைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.
இந்த சேவையை பத்மஸ்ரீ டாக்டர் ஆர்.வி. ரமணி, சங்கரா கண் அறக்கட்டளை தலைவர், தொடங்கி வைத்தார். சக்தி மசாலா நிறுவனர் பி.சி. துரைசாமி, அதன் இயக்குநர் சாந்தி துரைசாமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
முதியோருக்கான முழுமையான ஆதரவு அமைப்பை உருவாக்கும் நோக்கில், சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் பிரயோஜனா நிறுவனம் உடன் ‘அபயம்’ இணைந்து செயல்படுகிறது.
‘அபயம்’ சார்பில் மருத்துவ வழிகாட்டுதல், இதயநோய் ஆலோசனை மற்றும் மருத்துவமனை வருகை ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்படும். பிரயோஜனா நிறுவனம் சார்பில் வீட்டிலேயே முதியோருக்குத் தேவையான சேவைகள், போக்குவரத்து, பொழுதுபோக்கு மற்றும் துணை சேவைகள் வழங்கப்படும்.
விநாயகர் சதுர்த்தி தினமான செப். 14 முதல் ‘அபயம்’ சேவை முழுமையாக செயல்படத் தொடங்கும். மேலும், ‘அபயம்’ மொபைல் செயலி மற்றும் இணையதளம் உருவாக்கப்பட்டு வருவதாகவும், அவை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0