கூட்டுறவு வங்கி ஊழியர்களை அவதூறாக பேசியதாக புகார் நடவடிக்கை கோரி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்...!

Sep 23, 2026 - 11:06
 0  185
கூட்டுறவு வங்கி ஊழியர்களை அவதூறாக பேசியதாக புகார் நடவடிக்கை கோரி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்...!
கூட்டுறவு வங்கி ஊழியர்களை அவதூறாக பேசியதாக புகார் நடவடிக்கை கோரி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்...!

ஈரோடு,கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலும், அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசியதாகக் கூறப்படும் விவசாய சங்க நிர்வாகி ஈசன் முருகசாமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம், ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பும் நடந்தது.இதில் சங்கத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளர் மாரிமுத்து தலைமையில், மாவட்ட நிர்வாகிகள் மதியழகன், செந்தில்குமார், முத்துகிருஷ்ணன், வசந்தகுமார் உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனப் பணியாளர்கள் மற்றும் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.இதுகுறித்து மாவட்டச் செயலாளர் மாரிமுத்து கூறியதாவது:

விவசாய சங்கப் பிரதிநிதி என்ற முறையில் செயல்பட்டு வரும் ஈசன் முருகசாமி, சமீபத்தில் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அளித்த பேட்டியில், கூட்டுறவு கடன் சங்கப் பணியாளர்கள் வசூலுக்கு வந்தால் அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்றும், செருப்பைக் கழற்றி கூட்டுறவு அலுவலகத்திற்குள் வீச வேண்டும் என்றும் பேசியதாகக் கூறப்படுகிறது.கூட்டுறவு ஊழியர்களை வன்முறைக்கு உள்ளாக்கும் வகையிலும், பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையிலும் அமைந்துள்ளதாகக் கூறப்படும் இத்தகைய பேச்சை சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன்களுக்கான தவணைத் தேதியை நினைவூட்டுவதும், உரிய காலத்திற்குள் கடனை திருப்பிச் செலுத்துமாறு நேரிலோ, தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்வதும் வழக்கமான பணியாகும்.

பயிர்க்கடன்கள் உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தப்பட்டால் மட்டுமே, அதற்கான வட்டி சலுகையை அரசு ஏற்றுக்கொள்ளும் நடைமுறை உள்ளது. எனவே, விவசாயிகள் தவணை தவறி தேவையற்ற வட்டிச்சுமைக்கு ஆளாகக்கூடாது என்ற நோக்கிலேயே பணியாளர்கள் நினைவூட்டல் மற்றும் வசூல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கும் கூட்டுறவு கடன் சங்கப் பணியாளர்களுக்கும் இடையே நீண்டகாலமாக நல்லுறவு நிலவி வருகிறது. பெரும்பாலான விவசாயிகள் தங்களது கடன்களை முறையாக திருப்பிச் செலுத்தி வருகின்றனர்.

கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்கள் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். எனவே, விவசாயிகளிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொள்வது ஊழியர்களின் நோக்கமாக இருக்க முடியாது.

கூட்டுறவு ஊழியர்களின் பணியில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பதாக விவசாயிகள் கருதினால், சம்பந்தப்பட்ட உயர் அலுவலர்களிடம் சட்டரீதியாக புகார் அளிக்கலாம். ஆனால், ஊழியர்களை அவமதிக்கும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும், ஒரு விவசாயி மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரிழந்ததாக சிலர் கூறி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட விவசாயியின் உடல்நிலை, மருத்துவப் பின்னணி மற்றும் சம்பவத்துக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்ட பின்னரே உண்மை நிலை தெரியவரும். விசாரணை முடிவதற்கு முன்பாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

எனவே, ஈசன் முருகசாமி பேசியதாகக் கூறப்படும் கருத்துகளின் முழுமையான உள்ளடக்கம் மற்றும் சட்டரீதியான ஆதாரங்களை ஆய்வு செய்து, பொருந்தக்கூடிய சட்டப்பிரிவுகளின் கீழ் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆர்ப்பாட்டத்தின் முடிவில், சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களிடம் மனுக்கள் அளிக்கப்பட உள்ளன.

சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் வரை ஜனநாயக மற்றும் சட்டப்பூர்வமான வழிகளில் போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க முடிவு செய்துள்ளதாகவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க வேறுபாடின்றி கூட்டுறவு நிறுவனங்களின் பல்வேறு நிலைப் பணியாளர்கள் பங்கேற்றனர். நியாயவிலைக் கடை பணியாளர்கள் உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனப் பணியாளர்களும், அரசு ஊழியர்கள் சங்கம், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தனர்.

கூட்டுறவு ஊழியர்களின் கண்ணியம் மற்றும் பணிப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் மாரிமுத்து, மாவட்ட நிர்வாகிகள் மதியழகன், செந்தில்குமார், முத்துகிருஷ்ணன், வசந்தகுமார், கூட்டுறவு நிறுவனப் பணியாளர்கள் மற்றும் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0