ராயல் கேர் மருத்துவமனையில் இதய அவசர சிகிச்சைப் பயிலரங்கம்! மாரடைப்பு, இதயத் தடுப்பு உள்ளிட்ட அவசர நிலைகளைக் கையாள மருத்துவர்களுக்குப் பயிற்சி...!
கோவை ராயல் கேர் உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் இந்திய அவசர மருத்துவச் சங்கம் இணைந்து நடத்திய இதய அவசர சிகிச்சைப் பயிலரங்கம் மற்றும் தொடர் மருத்துவக் கல்வி நிகழ்ச்சி, ராயல் ஃபோரம் அரங்கில் நடைபெற்றது.
ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் க. மாதேஸ்வரன் தலைமை வகித்து, பயிலரங்கைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், இதய நோய் பாதிப்புடன் வரும் நோயாளிகளின் உடல்நிலையை விரைவாகக் கண்டறிந்து, உரிய அவசர சிகிச்சைகளை வழங்கும் வகையில் மருத்துவர்களின் திறனை மேம்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் நோக்கம் என்றார். மேலும், இதய அவசர நிலைகளால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்க நவீன சிகிச்சை முறைகள் மற்றும் மருத்துவ அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது அவசியம் என்றும் தெரிவித்தார்.
இந்திய அவசர மருத்துவச் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஸ்ரீநாத் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பயிலரங்கைத் தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது, இதய அவசர சிகிச்சையின்போது நோயாளிகளின் பாதிப்புகளை விரைவாகக் கண்டறிந்து, தாமதமின்றி உரிய சிகிச்சைகளை வழங்குவது உயிரைக் காப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றார்.
பயிலரங்கில், மாரடைப்பு, இதயத் துடிப்பு சீரற்ற நிலை, இதயத் தடுப்பு, பெருநாடி சார்ந்த அவசர பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பிரச்னைகளைக் கையாளும் வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. குறிப்பாக, இளம் வயதினருக்கு ஏற்படும் மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படும் அவசர நிலைகள், நுரையீரல் ரத்தக் குழாயில் ரத்தம் அடைத்தல் போன்ற பாதிப்புகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது குறித்து மருத்துவர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களுக்கு விளக்கப்பட்டது.
மேலும், அவசர சிகிச்சைப் பிரிவில் உயிரைக் காக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், இதயத் தடுப்பு ஏற்படும் நேரத்தில் அளிக்க வேண்டிய முதலுதவி மற்றும் நோயாளிகளைப் பாதுகாப்பாகக் கையாளும் முறைகள் குறித்தும் மருத்துவக் கருத்துகள் பகிரப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, ராயல் கேர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் கண்ணன் தங்கவேலு, திவ்யா, கமலகண்ணன், ராஜ் விஷ்ணு, அகிலன், இளவரசன் ஆகியோர் செய்திருந்தனர்.
மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் பி. பரந்தாமன், தலைமைச் செயல்பாட்டு அலுவலர் டாக்டர் கே.டி. மணிசெந்தில்குமார் மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் மூத்த பொது மேலாளர் எம். வெங்கடேசன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளில் பங்கேற்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0