பத்து ஆண்டுகளில் அதிகரித்த தொற்றா நோய்கள்: கே.எம்.சி.ஹெச் ஆய்வில் அதிர்ச்சி தகவல்...!
கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தொற்றா நோய்கள் குறித்த ஆய்வில், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் பாதிப்பு கணிசமாக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
2,250 படுக்கைகள் கொண்ட கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை, மருத்துவ ஆராய்ச்சிக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த 2015ம் ஆண்டு கே.எம்.சி.ஹெச் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டது. கிராமம், சிற்றூர், நகரம் என மூன்று விதமான பகுதிகளைச் சேர்ந்த மக்களை தொடர்ந்து கண்காணித்து, தொற்றா நோய்கள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது.
2015 முதல் 2026 வரை மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், உடல் பருமன் உள்ளவர்களின் எண்ணிக்கை 43.1 சதவீதத்தில் இருந்து 57 சதவீதமாக அதிகரித்துள்ளது. பெண்களிடையே இது 63.3 சதவீதமாகவும், 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களிடையே 61.4 சதவீதமாகவும் இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், அதிக ரத்தச் சர்க்கரை மற்றும் கொழுப்புச் சத்து ஏற்றத்தாழ்வு ஆகியவை ஒரே நபரிடம் இணைந்து காணப்படுவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அறிகுறிகள் இல்லாத நிலையிலேயே சிலருக்கு இதய தமனிகளில் ஆரம்பநிலை பாதிப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பில், ஆரம்பத்தில் ஆரோக்கியமாக இருந்த மூன்று பேரில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. ரத்தச் சர்க்கரை அளவு இயல்பாக இருந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோ அல்லது நீரிழிவு ஏற்படும் நிலையிலோ இருந்துள்ளனர். மேலும், ஆரோக்கியமான எடையுடன் இருந்தவர்களில் குறிப்பிடத்தக்க அளவினருக்கு உடல் எடை அதிகரித்துள்ளது.
இந்த ஆய்வு முடிவுகளை பகிர்ந்து கொள்வதற்காக, கோவை காளப்பட்டியில் உள்ள டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியில் செப். 19, 20 ஆகிய தேதிகளில் தொற்றா நோய்கள் மற்றும் கிராமப்புற பொது சுகாதாரம் தொடர்பான மாநாடு நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் பொது சுகாதார நிபுணர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
மாநாட்டை கே.எம்.சி.ஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், நாட்டில் எந்த வகையான நோய்கள் எத்தனை பேரை பாதிக்கின்றன என்பதை அறிந்து கொள்வதற்கும், அரசு கொள்கைகள் மற்றும் பொது சுகாதார திட்டங்களை வகுப்பதற்கும் இதுபோன்ற ஆய்வுகள் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
சிறப்புரையாற்றிய கே.எம்.சி.ஹெச் இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி, ஆரம்பநிலை அறிகுறிகள் மற்றும் ஆபத்து காரணிகளை கண்டறிவதன் மூலம், கிராமம், சிற்றூர், நகரம் என அனைத்து பகுதிகளிலும் எதிர்கால தலைமுறையினரை பாதுகாக்கும் வகையில் இலக்கு சார்ந்த நடவடிக்கைகளை உருவாக்க முடியும் என்றார்.
கே.எம்.சி.ஹெச் கல்லீரல் நோய் மற்றும் எண்டோஸ்கோபி நிபுணர் டாக்டர் அருள்ராஜ் ராமகிருஷ்ணன், நோய் கண்டறியப்படுவதற்கு முன்பே உடலில் ஏற்படும் பாதிப்புகளை தினசரி மருத்துவப் பணியில் காண முடிகிறது என்றும், இந்த பத்தாண்டு ஆய்வு முன்கூட்டியே பரிசோதனை செய்வதன் அவசியத்தை உறுதிப்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்தார்.
இளம் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், டாக்டர் தவமணி தேவி பழனிசாமி இளம் ஆய்வாளர் விருதும் மாநாட்டில் வழங்கப்பட்டது.
நோய் ஏற்பட்ட பிறகு சிகிச்சை அளிப்பதை விட, ஆபத்து காரணிகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதே சிறந்தது என்பதை இந்த ஆய்வு முடிவுகள் வலியுறுத்துகின்றன.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0